Published : 06,Sep 2019 02:16 AM

“கடவுள் இல்லை என்று கருத்து கூற உரிமை இருக்கிறது”- உயர்நீதிமன்றம்

Petition-to-remove-text-under-Periyar-statues-dismissed

கடவுள் உண்டு என்று கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது போல, கடவுள் இல்லை என்று கருத்து தெரிவிக்கவும் உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில், எம்.தெய்வநாயகம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘ பெரியார் உயிரோடு இருந்தபோது, அப்போதைய முதல்-அமைச்சர் அண்ணா திருச்சியில் பெரியாருக்கு 1967-ம் ஆண்டு சிலை நிறுவினார். அந்த நிகழ்ச்சியில் காமராஜர், குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நாத்திகம் குறித்து பெரியார் சிலையின் கீழ் எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை. 1973-ம் ஆண்டு பெரியார் மறைந்த பின்னர் தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளின் பீடத்தில், ‘கடவுள் இல்லை. கடவுள் இல்லை. இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பெரியார் பகுத்தறிவு கொள்கையைத்தான் பரப்பினாரே தவிர, நாத்திகத்தை போதிக்கவில்லை. எனவே, சிலைக்கு கீழ் உள்ள வாசகங்களை அகற்ற உத்தரவிடவேண்டும்’ கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- பெரியாரின் சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் தீங்கு விளைவிக்கும் வாசகம் இல்லை. பொதுநல வழக்கு என்று  கூறி சொந்த நலனுக்காக மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுதாரரை பொருத்தவரை உலகத்தில் இரண்டு மதங்கள் தான் உள்ளன. ஒன்று சிவன் கடவுளை கொண்ட சைவ மதம். மற்றொன்று விஷ்ணு கடவுளை கொண்ட வைணவ மதம். இதுமட்டுமல்ல மனுதாரர், ‘அனைத்து தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு’ என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு, ஒருபுறம் பெரியார் கொள்கைகளை போதிக்கிறார். மற்றொரு புறம் தன்னுடைய சொந்த கருத்துக்களை பரப்புகிறார். இவர் நடத்தும் பல கூட்டங்களில் நான் கலந்துக் கொண்டு உரையாற்றியுள்ளேன். இவர் எழுதிய புத்தகத்துக்கு நான் அணிந்துரை எழுதியுள்ளேன். மத போதனைகளை செய்ய எங்கள் இயக்க வளாகத்துக்குள் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்பதால், இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே, இவருக்கு பெரும் தொகை அபராதம் விதித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளில், ‘மாறுப்பட்ட தத்துவ சிந்தனைகளை வெளிப்படுத்த உரிமை அனைவருக்கும் உள்ளது. அந்த கருத்துச் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது’  என்று கூறியுள்ளது.  பெரியார் நாத்திகத்தை போதிக்கவில்லை என்று மனுதாரர் கூறுகிறார். ஆனால், 1928-ம் ஆண்டு முதல் பெரியார் பேசிய உரை, எழுதிய கட்டுரைகளை பார்க்கும்போது, கடவுள் இல்லை என்று தான் பெரியார் கூறியுள்ளார். 

தஞ்சையில் பெரியார் சிலை நிறுவப்பட்டபோது, கடவுள் மறுப்பு வாசகங்கள் அதன் கீழே பொறிக்கப்பட்டது. அதை எதிர்த்து சிலர் அரசுக்கு 1970-ம் ஆண்டு புகார் அனுப்பினர். அதற்கு பதில் அளித்த அப்போதைய தலைமை செயலாளர் ராயப்ப ஐ.ஏ.எஸ்., ‘ஒருவரது பேச்சுக்களும், எழுத்துக்களும் அவரது சிலைக்கு கீழ் பொறிப்பது வழக்கம். அது முற்றிலும் நியாயமானது’ என்று கூறி புகாரை நிராகரித்துள்ளார். இதுகுறித்து செய்தி வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து ‘ரிட்’ வழக்கும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், இந்த வாசகங்கள் பொது ஒழுக்கத்தை பாதிப்பதாக கருத முடியாது’ என்று 1978-ம் ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளார். எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19-ன் எப்படி கடவுள் உண்டு என்று கருத்து தெரிவிக்க மனுதாரருக்கு உரிமை வழங்கியுள்ளதோ, அதேபோல கடவுள் இல்லை என்று கருத்து தெரிவிக்க எதிர்மனுதாரருக்கு உரிமை வழங்கியுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.” இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்