Published : 19,May 2017 07:54 AM
காதலித்து, ஏமாற்றி, சிவப்பு விளக்கில் விற்ற காதலன்!

பதினாறு வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு டெல்லியில் வசிந்து வந்தவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 16. அதே பகுதியில் வசிக்கும் பன்னா லால் என்பவருடன் நட்பாகப் பழகினார். பிறகு சுமதியை தனது காதல் வலையில் வீழ்த்தினார். இதையடுத்து பன்னாவை நம்பத் தொடங்கினார் சுமதி. ஒரு நாள் அவரைத் தனியாக வரவழைத்த பன்னா லால், பாலியல் பலாத்காரம் செய்து திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தார். பின்னர், அதை வைத்து சிறுமியை மிரட்டத் தொடங்கினார். கடந்த டிசம்பர் 23ம் தேதி சுமதியை அவரது இடத்துக்கு வரவழைத்த பன்னா, அவர் முகத்தில் ஒரு துணியை வைத்தார். இதையடுத்து மயங்கி விட்டார் சுமதி. பிறகு என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை.
இதையடுத்து சுமதியை நண்பர்களுடன் கடத்திச் சென்ற பன்னா, உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் பாலியல் தொழிலுக்காக விற்றுவிற்றார். அங்கிருந்து பல முறை சுமதி தப்பிக்க நினைத்தார். முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள சிலரின் உதவியோடு நேற்று தப்பி டெல்லிக்கு வந்தார். போலீசாரிடம் நடந்ததைக் கூறினார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பன்னாவை தேடி வருகின்றனர்.