Published : 01,Sep 2019 11:56 AM
“முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்

முதல் சதத்தை தனது உயிரிழந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக இந்திய வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விஹாரி 111 (225) குவித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா 57 (80) ரன்கள் சேர்த்து அசத்தினார். இதையடுத்து பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளார் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கிடையே தனது முதல் சதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஹாரி, “எனக்கு 12 வயது இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். அந்தச் சமயத்தில், நான் எப்போது எனது முதல் சர்வதேச சதத்தை அடிக்கிறேனோ அதை எனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தீர்மானித்தேன். அதன்படி இப்போது அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
இன்று எனக்கு ஒரு நெகிழ்ச்சியான நாள். எனது தந்தை எங்கிருந்தாலும், இப்போது பெருமையடைவார் என நம்புகிறேன். எனது தந்தைக்கு கொடுக்க நினைத்ததை சாதித்துவிட்டேன் என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் சதம் அடிப்பதற்கு உறுதுணையாக என்னுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.