Published : 18,May 2017 01:57 PM

முத்தலாக் வழக்கு: கைகளில் குர்-ஆன் உடன் வந்த நீதிபதிகள்

triple-talaq-case-supreme-court

முத்தலாக் வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள். இதை எதிர்த்து சில இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள், தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட முன்பு விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன், யு.யு.லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் முத்தலாக் வழக்கு தினசரி விசாரணையாக நடைபெற்றுவந்தது.

இந்த விசாரணையில் முத்தலாக் முறையை நீதிமன்றம் ரத்து செய்தால் அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களுக்கென தனி சட்டம் கொண்டுவரத் தயார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வாதாடிய மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல், அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது எப்படி நம்பிக்கையோ, அதேபோல் முத்தலாக் முறை கிபி.637 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கை என்று தெரிவித்தார். அந்த மதநம்பிக்கைக்கு சட்டக்குறுக்கீடு இருக்கக்கூடாது என்று அவர் வாதாடினார்.

முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே வழங்கலாமா? அல்லது திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா? என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் யோசனை கோரியது. இதற்கு பதிலளித்த இஸ்லாமிய வாரியம் பெண்களும் முத்தலாக் கூறலாம் என தெரிவித்துள்ளது. மேலும் முத்தலாக் சொல்ல இஸ்லாமிய பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த வாதம் முடிவடைந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஆங்கில மொழியில் உள்ள குர்-ஆன் ஐ கைகளில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்