Published : 28,Aug 2019 02:06 PM
75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “2021-22ஆம் ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதன் மூலம் 15,700 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கும்” என்றார்.
அதேபோல், “2019-20 ஆண்டு காலத்தில் கூடுதலாக கிடைக்கும் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 லட்சம் டன் சர்க்கரை இந்த நிதியாண்டில் ஏற்று செய்யப்படும்” என அவர் கூறினார்.
மேலும், பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டணி அமைக்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றும் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.