Published : 28,Aug 2019 10:40 AM
வருமானவரி தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள் - நிதியமைச்சகம் திட்டவட்டம்

2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிதாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், காலநீட்டிப்பு அளிக்கப்படாது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்து கூடுதல் அவகாசம் கோரப்பட்டதையடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜுலை 31ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதியாக மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுவிட்டதால், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால், ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாயும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கு பிறகு வருமானவரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதத் தொகை மேலும் அதிகரிக்கும். எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து உரிய நேரத்திற்குள் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்த்தப்பட்டுள்ளது.