Published : 26,Aug 2019 03:16 AM

புலந்த்ஷர் வன்முறை வழக்கு: குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை!

Out-on-bail--Bulandshahr-violence-accused-get-heroes--welcome

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷரில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில், சிறையில் இருந்து ஜாமினில் வந்த இந்து அமைப்பினர்களுக்கு ராஜமரியாதை வழங்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள மஹ்வா கிராமத்தின் வனப்பகுதியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சட்டவிரோத பசு வதைக்கூடம் செயல்படுவதாகக் கூறி கிராமத்திற்குள் திரண்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

   

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரியும் இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த வன்மு றை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஷிகர் அகர்வால், ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் உட்பட 7 பேர் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இவர்களுக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சனிக்கிழமை இரவு சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்ற இந்து அமைப்பினர், ’’பாரத மாதா கீ ஜே, வந்தே மாதரம்’ என கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் அருகில் நின்று இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கு பின்னர் பார்ட்டி வைக்கப் பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்