Published : 22,Aug 2019 11:31 AM
‘சிதம்பரத்திடம் நீதிமன்றமே கேள்விகள் கேட்கலாம்’ - அனல் பறக்கும் வாதம்

ப.சிதம்பரத்திடம் நீதிமன்றமே கேள்விகளை கேட்கலாம் என அவரது தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் பெற வேண்டும் என்ற முனைப்பில் அவரது வழக்கறிஞர்கள் கடுமையான வாதத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் செய்த போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மேத்தா குறுக்கிட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாதிட்ட சிங்வி, நீதிமன்றத்தில் உள்ள சிதம்பரத்திடம் தேவையான கேள்விகளை நீதிபதியே கேட்கலாம் என தெரிவித்தார். வழக்கில் ஆதாரம் இருப்பதாக கூறும் சிபிஐ இத்தனை நாட்கள் அதை வைத்துக்கொண்டு என்ன செய்தார்கள் ? எனவும் சிங்வி வாதிட்டார். அத்துடன் டெல்லி உயர்நீதிமன்றம் 7 மாதங்கள் கழித்து ஏன் ரத்து செய்ய வேண்டும் ? என கேள்வி எழுப்பினார். மேலும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எங்கே என்றும் அவர் வினவினார்.
ஆனால் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதில் உறுதியாக இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. அவர் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதற்காக எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என சிபிஐ கேட்டுக்கொண்டது. மேலும் நன்கு சட்டம் தெரிந்த சிதம்பரத்திற்கு கேள்விகளை எப்படி தட்டிக்கழிப்பது என்பது நன்றாக தெரியும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவலில் வைத்து விசாரிக்கமால் உண்மையை வெளிக்கொண்டுவர முடியாது எனவும் சிபிஐ தரப்பு வாதிட்டது.