Published : 16,May 2017 12:54 PM

பலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி

PM-Modi-is-the-hero-without-proper-villan

2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த மோடி மூன்று ஆண்டுகளை முடித்து விட்டார்.

இந்த மூன்று வருடங்களில், பலமான பிரதமர் என்ற பெயருடன் வலம் வரும் மோடியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொள்ளும் படி வளரவில்லை. பலவீனமாக உள்ளதாகவே தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லை. அடுத்த தலைவராக கருதப்படும் அவரது மகன் ராகுல் காந்தி இன்னும் எந்த தேர்தலிலும் அவரது தலைமைப் பண்பை நிரூபித்துக் காட்டவில்லை என்ற விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார். வலுவான தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் துவண்டு போயிருக்கின்றனர் எனப் பரவலான கருத்து நிலவுகிறது.

பாஜகவுக்கு எதிரானவர் மதசார்பற்றவர் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர் அகிலேஷ் யாதவ். அவரும் சமீபத்தில் நடந்த உபி தேர்தல் முடிவுகளால் பின்னடைவையே சந்தித்தார்.

பீகாரில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிதிஷ் மோடியை எதிர்க்கும் வலுவான தலைவராகக் கருதப்படுகிறார். அவரது மெகா கூட்டணியில் உள்ள லாலு மறுபடியும் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியது அந்தக் கூட்டணிக்கு சருக்கலைக் கொடுத்திருக்கிறது. பீகாரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற விமர்சனம் வேறு நிதிஷ் குமாரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடியை எல்லா விஷயங்களிலும் எதிர்க்கும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியை தவிர மற்ற இடங்களில் கால் பதிக்க திணறுகிறார்.

தனது பலவீனத்தைப் புரிந்துகொண்ட காங்கிரஸ், மோடியை எதிர்க்கும் தனது உத்தியை மாற்றியுள்ளது. குறைவான பேச்சு, அதிக செயல் என்பதே அந்த உத்தி. மோடியை பற்றி மட்டும் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு, கொள்கை ரீதியிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதை மக்களிடம் சென்று சேர்ப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தானில் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய வலுவான தலைவர்களையும் நியமித்துள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். ஜுன் மாதம் நடக்கவிருக்கும் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவில் பல மாநில முதல்வர்களும், பாஜக அல்லாத கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கலாம் எனவும் தெரிகிறது.

இது அரசியல் ரீதியில் அவரது சாதனை என்றே வைத்துக் கொண்டாலும், அவரது ஆட்சி குறித்த மக்களின் கருத்து கொஞ்சம் கவலைக்கிடமாகவே உள்ளது.

மோடியின் ஆட்சியைப் பற்றி பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மோடி மிகப் பெரிதாகப் பேசப்பட்ட தூய்மை இந்தியா, மேக் இன் இண்டியா போன்ற திட்டங்கள் தோல்வி அடைந்தள்ளதாக 80 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வங்கிக் கணக்கு திறக்க வழி செய்யும் ஜன் யோஜனா திட்டம் வெற்றி பெற்றதா என்ற கேள்விக்கு 29 சதவீதம் பேரே ஆம் என்று சொல்லியிருக்கின்றனர். பண வீக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வேலையின்மை அதிகரித்துள்ளது என்றே பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தாங்கள் தேர்ந்தெடுத்த பாஜக பிரதிநிதிகள் தொகுதிப் பிரச்சனைகளையோ மக்களின் குறைகளையோ கண்டு கொள்ளவில்லை என 69 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஆக மொத்தத்தில் எதிரிகள் பலவீனமாக உள்ளதால் கதாநாயகாக வலம் வருகிறார் மோடி.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்