Published : 11,Aug 2019 02:02 AM

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு

Sonia-Gandhi-selected-Congress-Interim-leader

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவரை காங்கிரஸ் கமிட்டிக்குழுக்கள் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தின்போது ராகுல் காந்தியை தலைவராக தொடரும்படி வலியுறுத்தப்பட்டது. ஆனால் ராகுல் தமது முடிவில் உறுதியாக இருந்தார். அத்துடன் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வந்ததால், புதிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தகவல் பரவியது. பின்னர் சிறிது நேரத்தில் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் நடத்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் வேணுகோபால் கூறினார். சோனியா காந்தி ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்