
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆந்திர அரசு நீர் திறந்துள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுபடி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். அப்போது தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து நீர் திறக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஸ்ரீசைலம் அணையின் மொத்த கொள்ளளவான 215 டிஎம்சியில், தற்போது 206 டிஎம்சிக்கு நீர் இருக்கிறது. ஸ்ரீசைலம் அணையில் திறக்கப்பட்ட நீர், சோமசீலா அணைக்கும், பின்னர் கண்டலேறு அணைக்கும் 20 நாளில் வரும். பின்னர் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேரும்.