Published : 08,Aug 2019 06:51 AM
பஞ்சாப் முதல்வர் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி!

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர். இவர் பாட்டியாலா மக்களவைத் தொகுதி எம்.பியாக இருக்கிறார். கடந்த மாத இறுதியில் இவருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மானேஜர் என்றும், பழைய அரியர் பாக்கிக்காக கணக்கு பற்றிய விவரங்கள் தேவை என்றும் கேட்டுள்ளார். அதை உண்மை என்று நம்பிய கவுர், கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு பின் எண் உள்பட அனைத்தையும் கூறியிருக்கிறார். பிறகு நாடாளுமன்றக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி, அவரது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், வங்கி கணக்கில் இருந்து 23 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக வீட்டில் இருந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்தார். யாரும் வங்கியில் இருந்து பணம் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று அவருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக அன்சாரி என்பவரை கைது செய்துள்ளதாகவும் ஆன்லைன் திருட்டுக் கும்பலில் இவர் முக்கியமானவர் என்றும் பாட்டியாலா எஸ்.பி மன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.