Published : 24,Jul 2019 02:17 PM

அதிர வைக்கும் நெல்லை படுகொலை... நடந்தது எப்படி..?

Nellai-Murder--How-its-happen-

நெல்லை முன்னாள் மேயர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி ரோஸ் காலனியில் உள்ள பங்களா வீட்டில் தான் நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு முன்னாள் மேயரின் வீட்டிலேயே நுழைந்து இத்தகைய பாதகச் செயலை எப்படி செய்ய முடிந்தது? சம்பவத்தின் போது அவர்களின் அலறல் சத்தம் ஏன் யாருக்கும் கேட்கவில்லை? அரசியல் பிரமுகர் என தெரிந்திருந்தும் இத்தனை பெரிய குற்றத்தை நடத்த யாருக்குத் துணிச்சல் வந்தது? என பல கேள்விகளை எ‌ழுப்பியிருக்கிறது இந்தச் ச‌ம்‌பவம்.

உமா மகேஸ்வரியின் கணவரான முருகசந்திரன் தினமும் மாலை, பேரப் பிள்ளைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வராததால் பள்ளியில் இருந்தவர்கள் குழந்தைகளின் தந்தையான உமா மகேஸ்வரியின் மருமகனுக்கு தகவல் அளித்துள்ளனர். மாமனார்தானே எப்போதும் பிள்ளைகளை அழைத்து செல்வார் இன்று என்ன நேர்ந்தது என்ற குழப்பத்தில் அவர் உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு சந்தேகத்துடன் உள்ளே சென்றார். அதே வேளையில் பணிப்பெண்ணான மாரி வேலையை முடித்து விட்டு இன்னும் வீடு திரும்பாததால் அவரது தாயார் வசந்தாவும் உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு‌ள் நுழைந்தவர்களுக்‌குப்‌ பே‌ரதி‌ர்ச்சி. வீடெங்கும் ரத்தம் தெறித்துக் கிடந்தது.

உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டுப் பணிப்பெண் ஆகிய மூவரும் வெவ்வேறு அறைகளில் ‌கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். தகவல் கிடைத்து அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் கொலை செய்யப்பட்டவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கொடூர சம்பவம் குறித்த தகவல் பல மணி நேரத்துக்குப்‌ பிறகு மாலை 5 மணி அளவில் தான் தெரியவந்துள்ளது. கொலையைச் செய்தவர்கள் வீட்டின் முன்பக்க கதவு வழியே வீட்டினுள் நுழைந்து, அந்த வழியிலே தான் வெளியேறியிருக்கின்றனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வீட்டின் பின்பக்கத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடம் இருப்பதால் அந்த வழியாக கூட அவர்கள் உள்ளே வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு இருக்கிறது.

ஊருக்கு வெளியே சற்றுத் தள்ளி இருக்கும் வீடு, ஆள்நடமாட்டம் இல்லை என்ற விவரங்களை அறிந்தே கொலைகாரர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். முதலில் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து பணிப்பெண் மாரி வெளியே வந்திருக்கிறார். அவரது தலையில் இரும்பு கம்பியால் ஒரே அடியாக அடித்து கொலை செய்துள்ளனர். மூவரையும் கொலை செய்த பிறகு, அவர்கள் அணிந்திருந்த நகைகளை எடுத்திருக்கின்றனர். பின்னர், பீரோ, அலமாரி போன்றவற்றைத் திறந்து நகைகளையும் பணத்தையும் கொள்ளை அடித்துள்ளனர்.

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள உமாமகேஸ்வரியின் வீடுதான் அந்த பகுதியிலேயே பெரிய வீடு. அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் அவரது மகள் கார்த்திகாவின் வீடு இருக்கிறது. கார்த்திகாவின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பிரதான சாலை செல்கிறது. மற்ற வீடுகள் எல்லாம் அரை கிலோமீட்டர் தள்ளியே இருக்கின்றன. எனவே சம்பவத்தின் போது அவர்களின் அலறல் சத்தம் அக்கம் பக்கம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் உமாமகேஸ்வரி வீட்டின் முன் இருக்கும் சாலையை வெகுசிலரே பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நெருக்கமாக வீடுகள் இல்லை, பெருமளவில் ஆள் நடமாட்டம் இல்லை , காவலாளி இல்லை என்பன உள்ளிட்டவைகளே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பொதுவாக தெரியாதவர்கள் வந்தால், கேட்டிற்கு வெளியே நிறுத்தி பேசிவிட்டு அவர்களை அனுப்பி விடுவதே உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் வழக்கம் என்கின்றனர் உறவினர்கள். இவ்வளவு பெரிய வீட்டில் நுழைவாயிலில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததும் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் மற்றும் அருகில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு சம்பவத்தன்று யாரெல்லாம் இந்த சாலையில் வந்து சென்றனர் என காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

முக்கிய அரசியல் பிரமுகர் என தெரிந்தும் அவர் வீட்டில் நுழைந்து இத்தகைய வெறிச்செயலை செய்தது யார்? வெறும் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்