Published : 12,May 2017 03:32 PM

முத்தலாக் மோசமானது மற்றும் விரும்பத்தகாதது - உச்சநீதிமன்றம்

supreme-court-comments-on-3-thalak

திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதில் முத்தலாக் முறை மிகவும் மோசமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்யக்கோரி பல்வேறு பொதுநல மனுக்களும், பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் வந்துள்ளன. இவற்றை முஸ்லீம் பெண்களின் சம நீதிக்கான தாகம் என்று பொது தலைப்பில் விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முடிவு செய்தது.

இதன்படி தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையில் குரியன் ஜோசப், நாரிமன், லலித், அப்துல் நாசர் உள்ளிட்ட 5 நீதிபதிகளும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்தலாக் இஸ்லாமியரின் மரபில் உள்ளதால், அது இஸ்லாமிய அடிப்படை கருத்து தானா என்று விளக்கமளிக்க வலியுறுத்தினர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வாதாடிய மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், முத்தலாக் கூறும்போது அதற்கு மறுப்பு தெரிவிக்க பெண்களுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்தார்.

முத்தலாக் நீதித்துறை கண்காணிப்பு தேவைப்படும் பிரச்னை இல்லை என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் அனுமதிக்கப்படவில்லை என்றும், முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை தயாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞரான ராம்ஜித் மலானி, திருமண பந்தத்தை முறிக்க ஒருதலைபட்சமான முடிவு வெறுக்கத்தக்கது என்றும், தவிர்க்க வேண்டியது என்றும் கூறினார்.

அப்போது வாதிட்ட சல்மான் குர்ஷித், முத்தலாக் முறை பாவம் என்று இஸ்லாம் கூறுவதாகவும், ஆனால் அது அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குரியன் ஜோசப், முத்தலாக் பாவம் என்று கடவுள் கூறினார் என யாராவது சொன்னால் அதை சட்டம் உறுதிப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து நடைபெற்ற வாதங்களை கேட்ட நீதிபதிகள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ளும் முறைகளில் முத்தலாக் மோசமானது மற்றும் விரும்பத்தகாதது என்றும் தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்