[X] Close

மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு - கும்பகோணத்தில் இளைஞர் கைது

Man-held-for-posting-invite-for-beef-festival-on-Facebook

தஞ்சாவூரில் மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கொரப்பு பகுதியைச் சேர்ந்தவர் எழிலன். தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனரான இவர் கும்பகோணத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இந்துத்துவா அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எந்தத் தேதியில் நடைபெறும் என அவர் குறிப்பிடவில்லை.

               


Advertisement

இதனையடுத்து, ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக எழிலனை போலீசார் கைது செய்துள்ளனர். தனிப்பட்ட நபர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கில் வார்த்தைகளை பயன்படுத்தியது, அமைதியை குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்டது, மோதல் மற்றும் விரோத போக்கை தூண்டும் வகையில் செயல்பட்டது ஆகிய புகார்களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளபுலியூர் கிராம விஏஓ சுரேந்திரன் என்பவர் எழிலனுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இன்று காலை எழிலன் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, நாகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை 4 பேர் சரமாரியாக தாக்கினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். அந்தச் சம்பவத்தை அடுத்து மாட்டுக்கறி உணவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். அதனால், அப்போது, ட்விட்டரில் #Beef4life, #WeLoveBeef, #BeefForLife ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டும் ஆனது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close