Published : 17,Jul 2019 05:45 AM

ஆசை காட்டி ஆளை இழுக்கும் ‘வாவ் காயின்’ வியாபாரம் - பெண் ஒருவர் கைது 

one-girl-arrested-by-wow-coin-business-in-Chennai

சென்னையில் வாவ் காயின் எனப்படும் ஒரு டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்தால் பெருமளவு லாபம் ஈட்டலாம் என ஆசை காட்டி மோசடி செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வாவ் காய்ன் என்பது என்ன? இதன்மூலம் நடைபெற்ற மோசடி என்ன?

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி. அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த 2017 டிசம்பர் 1-ம்தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "தான் பார்மசிஸ்ட் படித்து முடித்துள்ளேன். பேஸ்புக் மூலமாக மாதேஷ் என்பவர் பழக்கமானார். அவர் "வாவ் காயின்" என்ற வர்த்தகத்தை தெரியப்படுத்தினார்.

இந்த "வாவ் காயினில்" பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு வருமானம் கிடைக்கும் என்று கூறினார். இதனை நம்பி நான் அண்ணா நகரில் வசித்து வரும் "வாவ் காயின்" வர்த்தகத்தை நடத்தி வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோரை அணுகினேன். அப்போது ஆர்த்தி இந்த வர்த்தகம் குறித்து தெரிவித்தார். "வாவ் காயின்" பணத்தை முதலீடு செய்தால் முதல் ஆண்டு முடிந்த பிறகு 10 மடங்கு அதன் மதிப்பு உயரும், 2-ம் ஆண்டு 100 மடங்கு உயரும் என்றும், அடுத்த ஆண்டுகளில் 1000 மடங்கு உயரும் என்றும் ஆசை வார்த்தை கூறி என்னை நம்ப வைத்தனர்.

இதனை நம்பி வங்கி கணக்கு மூலமாக ரூ. 18 லட்சம் செலுத்தினேன். 2017-ம்ஆண்டு பணத்தை செலுத்தினேன். மேலும் பணத்தை செலுத்தி 6 மாதத்திற்கு முதலீட்டு பணத்தை பெற்று கொள்ளலாம். ஆனால் முதலீட்டு தொடர்பாக வருமானம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று "வாவ் காயின்" நிறுவனத்தை நடத்தி வருபவர் என்னிடம் கூறினார்.

இதனை நம்பி நான் பணத்தை செலுத்தினேன். ஆனால் கூறியபடி செலுத்திய பணத்தை 6 மாதத்தில் திருப்பி தரவில்லை. வாவ் காயின் நஷ்டத்தில் செல்வதால் பணத்தை தர இயலாது என்று கூறி அவர்கள் மோசடியில் ஈடுபட்டனர். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் புகார்தாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அண்ணாநகர் போலீசார் மோசடி பிரிவில் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம்தேதி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டிசும் கொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகின்றனர். 

இந்திராணி முதலீடு செய்திருப்பது வாவ் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சியில்தான். இதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத அவரிடம் பெரிய லாபம் பெறலாம் எனக் கூறி ஏமாற்றி அவரை அதிக தொகையை முதலீடு செய்ய வைத்துள்ளனர். 

இந்த கிரிப்டோ கரன்ஸிகள், நாம் தினமும் பயன்படுத்தும் பணத்தின் மற்றொரு பரிமாணம் எனச் சொல்லலாம். சமீபத்தில் அதிக அளவில் பிரபலமான பிட் காயின்களும் ஒருவகையான கிரிப்டோ கரன்சிகள்தான். இவை முறைப்படுத்தப்பட்ட வங்கிகள் மூலம் உருவாக்கப்படுபவை அல்ல. இவை டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, பிளாக் செயின் எனப்படும் ஒரு பொது லெட்ஜரில் கணக்கு வைக்கப்படுகின்றன. 

இவை வங்கி நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படுவதால் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பரிவர்த்தனை உள்ளிட்டவற்றிக்கு பயன்படுத்தப்படுகின்றன. போதைப்பொருள் வியாபாரிகளும், பயங்கரவாதிகளும் இந்த கிரிப்டோ கரன்சிகளை அதிக அளவில் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்தியாவில் அரசு அங்கீகாரம் கிடையாது என்பதுடன் இவற்றிற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தள்ளது. 

அனைத்து கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய அரசு விரைவில் சட்டம் கொண்டுவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிட் காயின், வாவ் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் அவற்றில் முதலீடு செய்தால் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்