Published : 13,Jul 2019 08:25 AM
“அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா?” - நீதிபதி கேள்வி

அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களிலும் மழலையர் வகுப்புகளிலும் ஆசிரியர்களாக வேலை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உபரி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றுவதாக 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழகம் முழுவதும் 7000 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும் நடவடிக்கைகள் நடைபெறுகிறது. அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் மனுதாரர்கள் இடைநிலை வகுப்புகளை மட்டும் எடுக்கலாம். அரசு மழலையர் வகுப்பு எடுக்க நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்ட மற்ற பயன்களில் எந்த மாற்றமும் இருக்காது” என அரசு தெரிவித்தது.
இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா என அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடர்வதை ஆசிரியர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை ஏழை எளிய பெற்றோர்கள் சேர்க்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே அங்கன்வாடி மையங்களில் எல்.கே. ஜி, யு.கே.ஜி வகுப்புகளை அரசு தொடங்கியுள்ளது எனக்கூறிய நீதிபதி, அங்கன்வாடி மையங்களில் நியமிக்கப்படவுள்ள உபரி ஆசிரியர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.