பவர் ப்ளேவில் எப்படி ‘6 ஃபீல்டர்கள்’ வெளியே ? - தோனி ரன் அவுட்டும்.. சர்ச்சையும்..

பவர் ப்ளேவில் எப்படி ‘6 ஃபீல்டர்கள்’ வெளியே ? - தோனி ரன் அவுட்டும்.. சர்ச்சையும்..
பவர் ப்ளேவில் எப்படி ‘6 ஃபீல்டர்கள்’ வெளியே ? - தோனி ரன் அவுட்டும்.. சர்ச்சையும்..

உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட்டும், நியூஸிலாந்து பீல்டிங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. அன்றைய தினம் முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி இந்திய அணி பவுலிங்கை சமாளிக்க முடியாமல், 46.1 ஓவரில் 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது மழை குறுக்கிடவே போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து நேற்று மதியம் மூன்று மணிக்கு போட்டி தொடங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூஸிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இதற்கிடையே கேப்டன் விராட் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேற இந்தியா பரிதாப நிலையை அடைந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷாப் பண்ட் தலா 32 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜடேஜா நியூஸிலாந்து அணிக்கு தோல்வி பயத்தை காட்டினர். அதிரடியாக விளையாடிய ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து 47.5 ஓவரில் விக்கெட்டை இழந்தார். அப்போது இந்திய அணி 32 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும் தோனி களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்த ஓவர் முதல் பந்தை சந்தித்த தோனி சிக்ஸர் விளாச இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

ஆனால் அடுத்த பந்திலேயே இரண்டு ரன்கள் ஓட முயன்ற தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். உடனே இந்திய ரசிகர்கள் அனைவரும் தலையில் கை வைத்து விட்டனர். நியூஸிலாந்து வீரர் குப்தில் பந்தை எடுத்த வேகத்தில் நேராக ஸ்டம்பில் அடித்ததால் தோனி அவுட் ஆகியது ரீப்ளே பார்க்கும்போது தெளிவாக தெரிந்தது. இது இந்தியாவின் துரதிருஷ்டவசம் என அனைவரும் புலம்பினர்.

ஆனால் இப்போது ரன் அவுட்டில் ஒரு பிழை இருப்பதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தோனி விளையாடும்போது 3வது பவர் ப்ளே. கிரிக்கெட் முறைப்படி மூன்றாவது பவர் ப்ளேவில் 5 வீரர்கள் தான் பவுலிங் வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும். ஆனால் குப்திலுடன் சேர்த்து ஆறு பேர் வட்டத்திற்கு வெளியே நின்றுள்ளனர். 5 பேர் மட்டுமே வட்டத்திற்கு வெளியே இருந்திருந்தால் தோனி ரன் அவுட் ஆகியிருக்க மாட்டார் என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com