
சென்னை ஐஐடியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் சென்னை ஐஐடி சமூக கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் மையமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 3 நாள் கோடை முகாமை மே 17 முதல் 19 வரை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடத்த இருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பங்கு மற்றும் சமூக ரீதியான சிக்கல்களுக்கு பொருத்தமான தீர்வு காண உரிய விழிப்புணர்வை அளிப்பது இந்த முகாமின் நோக்கமாகும். காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வரை வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் www.csie.iitm.ac.in என்ற இணையதளத்தில் மே 12-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ.900. கட்டணத்தை முதல் நாளில் நேரடியாகச் செலுத்தலாம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பதிவுக்கட்டணம் கிடையாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சென்னை ஐஐடி சிஎஸ்ஐசி மூத்த திட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ராஜநாயகம் (செல்போன் எண் - 9840706401), தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன துணை இயக்குநர் சிவசங்கர் (7550022121) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.