
வாரிசு அரசியல் குறித்த அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களின் வாதத்தால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, மற்ற கட்சிகளை போல் தந்தை, மகன், பேரன் என வாரிசு அரசியலில் அதிமுக ஈடுபடவில்லை என கூறினார். அத்துடன் சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் காட்டிக்கொள்ளாமல், மாநிலங்களவை தேர்தலில் இஸ்லாமியர் மற்றும் பட்டியல் இனத்தில் ஒருவருக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியதாக குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் அவையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, வாரிசு அரசியல் குறித்து அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவற்றை நீக்க முடியாது என கூறினார். அதைத்தொடர்ந்து பேசிய சக்கரபாணி, அவையில் இல்லாதவர்கள் (அப்போது ஸ்டாலின் அவையில் இல்லை) குறித்து பேசுவது மரபில்லை என்றார். வாரிசு அரசியல் என வரும் போது ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவிந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் இவர்கள் எல்லாம் வாரிசுகள் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து இன்று கட்சி தலைவராகி இருப்பதாகவும், பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்களில் கலந்துக்கொண்டு முறையாக தான் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகி இருப்பதாகவும் கூறினார். வெறுமனே தான்தோன்றித்தனமாக பதவிக்கு வரவில்லை என பதில் அளித்தார். பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுக உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லாதபோது, திமுக உறுப்பினர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார். இதையடுத்து பேசிய சபாநாயகர், அதிமுக உறுப்பினர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.