
பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், தலைமறைவாக இருந்த கடைசி நபர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அமானுல்லாவின் நண்பர்களுக்கு தெரிந்ததால், தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலிப்பதாக கூறி தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி அவர்களது நண்பர்களுக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் உட்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மகளிர் காவலர்கள் காதலிப்பதாக கூறிய அமானுல்லாவை பிடித்து விசாரணை செய்தபோது, காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வன்கொடுமையில் உட்படுத்தியதை ஒத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து இதில் சம்பந்தபட்ட அமானுல்லா நண்பர்கள் முகமதுஅலி, முகமது ரபிக், சையது முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாட்சா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை தேடி வந்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரபுவைவும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் மீண்டும் அரங்கேறிய இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.