
சென்னையில் ஓய்வு பெற்ற கர்நாடக மாநில டிஜிபி வீட்டில் 10 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலியை திருடிய நபரை சிசிடிவி உதவியுடன் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடக மாநிலத்தில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு மரத்தால் ஆன ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலி ஒன்று இருந்தது. இதனை தனது வீட்டு முன்பு உள்ள வாசலில் வைத்துதான் காலையில் இவர் பத்திரிகை படிப்பது வழக்கம் என்று தெரிகிறது. இந்தச் சுழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நாற்காலியை திடீரென காணவில்லை. பின் யாரோ ஒருவர் அதனை திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் இது குறித்து அவர் சென்னை நகர காவல் ஆனையரிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், ராமச்சந்திரனின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். பின் ராமச்சந்திரன் வீடு மற்றும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத ஒருவர் ராமச்சந்திரன் வீட்டில் உள்ள ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தேக்கு நாற்காலியை தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் வைத்து திருடிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
அவர் தப்பிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து தனிப்படை போலீசார் தேடினர். மேலும் அந்தத் தேக்கு நாற்காலி குறித்து தனிப்படை போலீசார் 20-க்கும் மேற்பட்ட பழைய இரும்பு கடைகளில் சோதனை நடத்தினர். பிறகு நாற்காலியை திருடியது சென்னை மயிலாப்பூரை சேர்ந்த முத்து (30) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே முத்துவை கைது செய்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது கடந்த வாரம் பழைய இரும்பு சாமான்கள் வாங்கும் வியாபாரி போல டிஜிபி ராமச்சந்திரனின் வீட்டுக்கு சென்றபோது, அந்த நாற்காலியை பார்த்ததும், அதனைத் திருட திட்டமிட்டதையும், பின்னர் ராமச்சந்திரன் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து பட்டப்பகலில் நாற்காலியை திருடியது தெரிய வந்தது. மேலும் கைதான திருடன் முத்து இதுபோன்று பல வீடுகளில் உள்ள பழைய இரும்பு மரச்சாமான்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.