
முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அது குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், ஒருமனதாக எடுக்கப்படும் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார். இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலத்தின் முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தரப்பில் ஆலோசனை நடைபெறுவதாகவும், பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.