Published : 09,May 2017 10:21 AM

தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தடை

Supreme-Court-stays-order-to-deliver-judgements-in-Tamil-at-lower-courts

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலம், தமிழில் தீர்ப்புகளை எழுதலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 1994-ம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. உயர்நீதிமன்ற அறிவிக்கைக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு சோலை சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2015-ஆம் ஆண்டு மனு செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். தமிழில் மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டால் வெளி மாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஆங்கிலத்திலும் தீர்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் 1994-ல் வெளியிடப்பட்டது போல், கீழமை நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும் தீர்ப்பு வழங்கலாம் என்ற உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பான விரிவான விசாரணை பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்