[X] Close

பிரிக்க முடியாதது எது?... “தோனியும்.. விமர்சனமும்” 

ICC-Cricket-World-Cup-2019-ms-dhoni-and-critics-are-not-separated

இந்திய அணியைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் தோனியை சுற்றியே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும். அவர் சிறப்பாக ஆடினாலும் சரி, மிக மோசமாக ஆடினாலும் சரி, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் அதிகமாக எழும். ஒவ்வொரு முறை விமர்சனங்கள் எழும் பொழுதெல்லாம், தன்னுடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையால் அதற்கு அவர் பதிலடி கொடுத்து வருகிறார். இருப்பினும், விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை.

          

உலகக் கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகவும் மெதுவான பேட்டிங்கிற்காக தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்தப் போட்டியில் அவர் 52 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டிரைக்ரேட் 53.85. பந்துகளை நிறைய வீணடிக்கிறார் என்பதுதான் அவர் மீதான விமர்சனம். ஏனெனில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி போராடியே அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. அதனால்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 


Advertisement

            

தோனியும், கேதர் ஜாதவும் நீண்ட நேரம் களத்தில் இருந்த போதும், இறுதியில் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களிடம் மோசமாக தடுமாறினர். ரஷித் கான் ஓவரில் தோனி ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். 40 ஓவர்கள் முடிந்த பின்னரும் மிகவும் நிதானமாக ஆடுவதுதான் ரசிகர்களுக்கு டென்ஷனை ஏற்படுத்திவிடுகிறது. 

            


Advertisement

இந்த முறை, தோனியின் நிதானமான ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கரே நேரடியாக விமர்சித்துள்ளார். அடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் ஓவர்களை கடத்துவதாக கடுமையாக சாடியிருந்தார். இது, தோனி ரசிகர்களை சீண்டவே அவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 56 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர் பறக்கவிட்டார். 29 ஓவர்களில் 140 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர், விராட் கோலி உடனும், அவர் ஆட்டமிழந்த பிறகு ஹர்திக் பாண்ட்யாவுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து தோனி விளையாடினார்.

             

இறுதியில் தன்னுடைய பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்தார். தொடக்கத்திலே தோனி ஸ்டம்பிங் ஆகியிருப்பார். ஹோப் அதனை கோட்டைவிட்டு மீண்டும் ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். தோனியும் அதனை சரியாக பயன்படுத்தி அரைசதம் அடித்தார்.

ஒருவகையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாகவே தோனியின் அரைசதம் அமைந்துள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் அதுவும் சாதாரணமாக நடந்துவிடவில்லை. இன்றைய போட்டியிலும் தோனி மிக நிதானமாகவே விளையாடினார். தொடக்கத்தில் ஆடியபடியே பாதியில் அவர் ஆட்டமிழந்திருந்தால் மீண்டும் அவர் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பார். ஏனெனில் 40 பந்துகளில் 20 ரன்கள்தான் எடுத்திருந்தார். அவருக்குப் பின்னால் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா பந்துகளை வீணடிக்காமல் சீராக ரன்களை சேர்த்தார். 

             

எப்படியோ, இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் தோனி. இந்திய அணியின் இன்னிங்சில் சிக்ஸர் அடித்த ஒரே வீரர் தோனிதான். அந்த இரண்டு சிக்ஸர்கள் தோனி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கும். இப்பொழுதும், தோனியை அவரது ரசிகர்கள் கொண்டிக் கொண்டிருந்தாலும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. ஸ்பின்னர்களின் ஓவரை எதிர் கொள்வதில் தோனி அதிக அளவில் தடுமாறுகிறார் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டுதான் வருகிறது. அவரது நிதானமான ஆட்டம் அணியின் வேகத்தை குறைக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

                        

எப்படியோ, பிரிக்க முடியாதது எது? என்று கேட்டால் அதற்கு சரியான பதிலாக “தோனியும்.. அவர் மீதான விமர்சனமும்தான் அது” என சொல்ல வேண்டி இருக்கும். 


Advertisement

Advertisement
[X] Close