
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள அவர், ஒசாகா நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தான் 2014ல் இந்திய பிரதமரான பிறகு ஜப்பான் உடனான நட்பை மேம்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டியதாகக் கூறினார். தலைநகரங்கள் மற்றும் தூதர்களைத் தாண்டி ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும், தானும், இரு நாடுகள் இடையிலான ராஜாங்க உறவை பொதுமக்களிடம் கொண்டு சென்றிருப்பதாக மோடி கூறினார்.
சுவாமி விவேகானந்தர், ரபீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தியடிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நீதிபதி ராதாபினோத் பால் போன்ற ஆளுமை நிறைந்த தலைவர்கள் எல்லாம் ஜப்பான் உடனான உறவை மேம்படுத்தி வந்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இன்று நேற்று வந்தது அல்ல, பல நூற்றாண்டுகளைக் கடந்தது என்றும் பிரதமர் தெரி்வித்தார்.
ஏழு மாதங்களுக்கு முன்னர் தான் ஜப்பான் வந்திருந்தபோது, ஜப்பான் மக்கள் சின்சோ அபேவுக்கு மீண்டும் வெற்றியைத் தந்ததாக மோடி கூறினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில், ஒரு பிரதம சேவகனாக நாட்டு மக்கள் தன் மீது அதீத நம்பிக்கை வைத்து அபரிமிதமான வெற்றியைத் தந்ததாக மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்தியாவும் ஜப்பானும் இணைந்து புல்லட் ரயில் தயாரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியர்கள் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுவதற்கு முன்பாக அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மக்கள் பிரதமரைக் கண்டதும், “ஜெய் ஸ்ரீராம்..ஜெய்ஸ்ரீராம்” என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும் “வந்தே மாதரம்” என்ற கோஷமும் எழுப்பட்டது.