
சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், காவல்துறையினரை ஆபாசமாகப் பேசியதோடு தாக்கவும் முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, சாலையோர கடை, ஆட்டோ ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதி, ஒரு சுவரில் மோதி நின்றது. நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் காரில் இருந்த நபரை விசாரிக்க முற்பட்டபோது, அவர் மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. காரிலிருந்து வெளியே வந்த அவர், காவல்துறையினரை வாய்க்கு வந்தபடி ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார். அவர்களைத் தாக்கவும் முற்பட்டார்.
போதையிலிருந்தவரின் ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்தபோது, அவர் திருவான்மியூரில் தங்கியுள்ள நவீன் என்பது தெரியவந்தது. இவர் சொந்தமாக பழங்களை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து அவரை கைது செய்த நீலங்கரை காவல் துறையினர், 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் அடையாறு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.