Published : 26,Jun 2019 02:02 AM
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்கள் யார் ?

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுகவின் சார்பில் எம்.பி.க்களாக போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் யார் யார்..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி கண்டது. மக்களவை தேர்தல் பரபரப்பு ஓய்ந்த நிலையில், தமிழக மாநிலங்களவையின் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுழலில் தமிழகத்திலிருந்து யார் யார்..? மாநிலங்களவை எம்.பி.க்களாக செல்ல உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க 39 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் அதிமுகவிற்கு சட்டப்பேரவையில் தற்போது 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். 39 வாக்குகளுக்கு ஒரு எம்பி என்கிற அடிப்படையில் அதிமுகவின் சார்பில் 3 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. அதற்கு மேல் எம்பி பதவியை பெறுவதற்கு தேவையான எம்எல்ஏக்கள் அதிமுக வசம் இல்லை. திமுகவை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து சட்டப்பேரவையில் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரண்டு எம்பிக்களுக்கு தேவையான ஆதரவு உள்ள நிலையில், மூன்றாவது எம்பியை தேர்ந்தெடுக்க 9 எம் எல் ஏக்கள் குறைகிறது. எனினும் போட்டி என வரும்போது அதிக எம்எல்ஏக்களை கொண்டிருப்பதால் திமுகவிற்கு மூன்றாவது எம்பியும் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதனால் அதிமுக மற்றும் திமுகவின் சார்பில் தலா மூன்று எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
யாருக்கு வாய்ப்பு?
அதிமுக ஒரு எம்பி பதவியை பாமகவிற்கு தருவதாக ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது. எஞ்சிய இரண்டு எம்பி பதவிகளுக்கு தம்பிதுரை, கே.பி முனுசாமி, கோகுல இந்திரா, மைத்ரேயன் மற்றும் அன்வர் ராஜாவின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.
திமுகவைப் பொறுத்தவரை மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை தருவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவின் சண்முகம், வழக்கறிஞர்கள் என் ஆர் இளங்கோ, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மற்றும் ஈரோடு முத்துசாமி ஆகியோரின் பெயர்கள் எம்.பி பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.