Published : 25,Jun 2019 02:07 PM

உலகக் கோப்பை தொடர் 2019ல் நடந்த ‘தரமான சம்பவங்கள்’ என்ன? 

ICC-Cricket-World-cup-2019-some-best-moments-till-now

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றிலிருந்து நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தொடரில் நியூசிலாந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இதனையடுத்து நான்காவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன. 

இந்நிலையில் இதுவரை நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை திரும்பி பார்க்கலாம்.

சுழற்பந்துவீச்சுடன் தொடங்கிய உலகக் கோப்பை: இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் ஓவரை தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வீசினார். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் பேரிஸ்டோவின் விக்கெட் வீழ்த்தினார். 

தென் ஆப்பிரிக்காவின் தொடர்ச்சியான தோல்வி: தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வியடைந்தது. இதுவே முதன்முறை. அத்துடன் இந்த உலகக் கோப்பை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6இல் தோற்று இந்த அணி உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

ஷிகார் தவான் காயம்: உலகக் கோப்பை தொடரில் சிறந்த தொடக்க ஆட்டகாரகள் ஜோடியாக எதிர்பார்க்கப்பட்டது இந்தியாவின் ரோகித் ஷ்ரமா மற்றும் ஷிகர் தவான் ஜோடிதான். அதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் மேல் சேர்த்தனர். இந்தப் போட்டியில் ஷிகர் தவானின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தால் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினார். இவருக்கு பதில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் அதிர்ச்சி தோல்வி: நடப்பு உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால், இங்கிலாந்து அணிக்கு இது சொந்த மண் என்பதால் எளிதாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் அடுத்து இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்தது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இந்தத் தோல்விகளால் இங்கிலாந்து அணியின் நாக் அவுட் சுற்று வாய்ப்பும் சற்று கேள்விக்குறியாகியுள்ளது. 

வெளுத்துக் கட்டிய மழை: இந்த உலகக் கோப்பையில் ரசிகர்களின் கோபத்தை அதிகம் சம்பாதித்து மழைதான். ஏனென்றால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக பாகிஸ்தான்-இலங்கை, இந்தியா-நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ்-இலங்கை என நான்கு போட்டிகள் ரத்தாகின. இந்த முடிவுகள் அணிகளின் நாக் அவுட் சுற்று வாய்ப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: நடப்பு உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இந்தப் போட்டியில் வழக்கம் போல் இந்திய அணி பாகிஸ்தான் அணியை பந்தாடியது. இந்த முறையும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்து. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் 7 முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது இந்திய அணி. 

விமர்சனத்திற்கு உள்ளான சர்ஃபராஸ்: பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கடினமான விமர்சனத்திற்கு உள்ளானார். இந்தப் போட்டியின் அவர் கொட்டாவி விட்ட மாதிரியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் அவரின் முடிவுகளை விமர்சித்தனர். 

முதல் பந்தில் விக்கெட் எடுத்த விஜய் சங்கர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்தார். இதனையடுத்து அவரின் ஓவரை முடிக்க தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர் முற்பட்டார். இந்த ஓவரில் அவர் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் தனது முதல் உலகக் கோப்பையின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை விஜய் சங்கர் படைத்தார். 

ஹாட்ரிக் நாயகன் ஷமி: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். இவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக்கை அடுத்து மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். 

ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹசன் சிறப்பான ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இவர் இதுவரை 476 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் நடப்பு தொடரில் இவர் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் இந்த உலகக் கோப்பை இரண்டு போட்டிகளில் சதம் அடித்து 4 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். 

மீண்டும் ஜொலித்த வார்னர், ஸ்மித்: ஆஸ்திரேலிய அணியில் தடை காரணமாக ஒரு வருடமாக விளையாடாத வார்னர் மற்றும் ஸ்மித், நடப்பு உலகக் கோப்பையில் மறுபடியும் களமிறங்கினர். தங்களின் தடை காலத்திற்குப் பிறகு மீண்டும் விளையாட வந்ததால் இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 447 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல முன்னாள் கேப்டன் ஸ்மித் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அரை சதம் கடந்தார். 

தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோனியின் பேட்டிங் சற்று விமர்சனத்திற்கு உள்ளானாலும், இவரது விக்கெட் கீப்பிங் மற்றும் முக்கியமான அறிவுரைகள் சிறப்பாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கானை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்ததன் மூலம், அதிக ஸ்டெம்பிங் செய்தவர்கள் பட்டியலில் இருந்த மொயின் கானின் சாதனையையை தோனி முறியடித்தார். 

அத்துடன் இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முக்கிய அறிவுரை வழங்கியவரும் தோனிதான். அதேபோல பல இக்கட்டான தருணங்களில் விராட் கோலிக்கு சிறப்பான ஆலோசனைகளை தோனி வழங்கி வருகிறார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்