Published : 21,Jun 2019 01:04 PM
“386 கோடியை விரைந்து கொடுங்கள்” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜெயக்குமார்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் முதல் முறையாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
இதில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 4 ஆயிரத்து 459 கோடி ரூபாயையும், இழப்பீட்டுத் தொகை 386 கோடி ரூபாயையும் விரைந்து வழங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
கைத்தறிப் பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, விவசாய கருவிகள், ஜவுளி இயந்திர பாகங்கள், மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், உரம், பூச்சிக்கொல்லிகள், கட்டுமானப் பொருட்கள் போன்ற பலவகை பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது குறித்து அமைச்சர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
சினிமா டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மின்சார வாகனங்களுக்கான வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாகவும் அவ்வகை வாகனங்களுக்கான சார்ஜர் வரியை 18ல் இருந்து 1 சதவிகிதமாக குறைக்கவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.