Published : 07,May 2017 04:39 PM
சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள்: அரசுக்கு பட்டியலை அனுப்பியது ஐ.டி துறை

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக யார் யாருக்கு எவ்வளவு கமிஷன்கள் கொடுக்கப்பட்டன என்ற விவரம் சேகர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட அவரது டைரி மூலம் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 300 கோடி ரூபாய் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்துள்ளது அந்த டைரியின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட பான்மசாலா போன்ற போதைப் பொருட்களை விற்க லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 50 அதிகாரிகளின் பட்டியலும் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என வருமானவரித்துறை பரிந்துரை கடிதத்தையும் அனுப்பியுள்ளது.