Published : 20,Jun 2019 02:57 PM
நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி

சென்னை கே.கே நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பள்ளி மாணவர்கள் 2 பேர் நடுரோட்டிலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டு கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தக் காட்சியில் 2 பள்ளி மாணவர்களில் ஒருவர் சீருடையிலும், மற்றொரு மாணவர் சட்டை அணியாமலும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு கொண்டது இடம் பெற்றுள்ளது. இந்தச் சண்டையை சக மாணவர்கள் யாரும் விலகிவிடவில்லை.
சண்டையை உற்சாகப்படுத்துவது போல மாணவர்கள் கோஷமிடுவது வேதனை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணி ஒருவர் சண்டையை விலக்க முயன்ற போது கூட, சக மாணவர்கள் தடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுத்தி போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தற்போது மாணவர்கள் இது போன்று சாலையிலேயே சண்டையிட்டு கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.