
சென்னையில், வடகிழக்குப் பருவ மழை முடிவுக்கு வந்த நாளில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 191 நாட்கள் மழை பெய்யவில்லை.
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வறட்சி காரணமாக சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் வெப்பத்தை குறைக்கும் விதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்தது. ஆனால் சென்னையில் மழை பெய்யவில்லை.
வடகிழக்குப்பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னையில் இதுவரை இல்லாத அளவு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதிலிருந்து விடுபட மழை பெய்யாதா? என்கிற எதிர்பார்ப்பில் சென்னை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை முடிந்ததில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 191 நாட்கள் சென்னையில் மழை பெய்யவில்லை. இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு கிட்டதட்ட 193 நாட்கள் மழையின்றி தொடர்ச்சியாக வறண்ட வானிலையே நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.