
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் மனு குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள ஆறாயிரத்து 491 பணியிடங்களுக்கு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தேர்வு நடைபெறும் என இன்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2013 ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில், ஐந்தாயிரத்து 566 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பணியில் சேராதது, பணியில் சேர்ந்த சிலர் தங்களை விடுவித்துக் கொண்டது என சுமார் 500 பணியிடங்கள் காலியாக இருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களையும் சேர்த்து இன்று ஆறாயிரத்து 491 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காலியாக உள்ள சுமார் 500 பணியிடங்களை, தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கு வழங்காமல், தற்போதைய அறிவிப்பில் சேர்த்தது சட்டவிரோதம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலாளரும், டி.என்.பி.எஸ்.சி.யும் வரும் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.