
மகாபாரதம் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், புகார் தாரர் கூறுவது போல், மத உணர்வை புண்படுத்தும் நோக்கில், எந்த ஒரு உள்நோக்கத்தோடும் கருத்து தெரிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். நமது இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சட்டமேதை அம்பேத்கர், பாடகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஏகே ராமானுஜன் ஆகியோர் தங்களது புத்தகங்களில் விமர்சித்திருப்பதாக கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார். அதையே தாமும் பேசியதாகவும் அது கிரிமினல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றால், நேர்மையான விவாதத்திற்கு வாய்ப்பே இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது இந்த மனு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் புகார்தாரரின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில், சினிமா, திராவிடம் என பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், பெண்களை ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்றும், மகாபாரதத்தின் சூதாட்ட காலத்தை விட்டே நாம் வெளிவரவில்லை என்றும் கூறியிருந்தார். இது மகாபாரதத்தை இழிவு படுத்துவதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.