[X] Close

மாநிலங்களவையில் மீண்டும் ஒலிக்கப்போகும் வைகோவின் குரல் 

DMK-to-send-Vaiko-to-Rajya-Sabha

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவையில் கால்பதிக்க உள்ளார். தமிழ்நாட்டுப் பிரச்னைகள் இனி அவரது கணீர் குரலால் மத்திய அரசின் செவிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

சென்னையில், 1964ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முன்னிலையில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன்முதலில் பேசி, அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவர் வைகோ. மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்த அவர், திமுகவில் அயராது பணியாற்றிவர். திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவராகவும், தொண்டர் அணித் தலைவராகவும் களப்பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.


Advertisement

25 வயதிலேயே தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவராகவும், பிறகு குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1978ல், முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி நாடாளுமன்றம் சென்ற வைகோ, தனது ஆணித்தரமான வாதங்களால் அனைவரையும் கவ‌ர்ந்தார்.

அதன் பின்னர் 1984 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளிலும் அடுத்தடுத்து மாநிலங்களவை எம்பியாகி தொடர்ந்து 18 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றியவர். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்னை, நதி நீர் இணைப்பு, தமிழக மீனவர் மீதான தாக்குதல் எனப் பல விவகாரங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் அனல் பறக்கப் பேசியிருக்கிறார்.


Advertisement

மாநிலங்களவை மட்டுமின்றி, இரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் வைகோ. இவ்விரு முறையும் சிவகாசி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியார்மயமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மக்களவையில் தனது வாதத் திறமையால் தடுத்தவர் வைகோ. தற்போது திமுக கூட்டணியில் உள்ள வைகோ, மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். 

50 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்க்கையில் இருந்துவரும் வைகோ, டெல்லியில் அனைத்துக் கட்சிகளிலும் நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். பார்லிமெண்ட் டைகர் என்று அறியப்பட்டிருக்கும் வைகோவின் குரல் ஹைட்ரோகார்பன், மீத்தேன் விவகாரம், நீட் தேர்வு போன்ற விவகாரங்களுக்காக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close