Published : 28,May 2019 10:06 AM
மக்களவை காங்கிரஸ் தலைவராக தயார் - சசி தரூர்

மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க தயார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். ராகுல் காந்தியும் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்க்கே தோல்வி அடைந்துள்ளார். அதனால், மக்களவைக்கு காங்கிரஸ் சார்பில் யாரை தலைவராக நியமிப்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க தயார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார். இதுகுறித்து என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில், “நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் பேசுவதற்கு எனக்கு பொறுப்பு உண்டு. அதனை கடந்த பல ஆண்டுகளாக செய்துவருகிறேன். கட்சிக்கான நாடாளுமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
சசிதரூர் மூன்றாவது முறையாக திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.