
இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது.
இதுவரை 503 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக 290 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 13 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜக தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அமோக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிறிசேன உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau)வும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில், ‘’மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனடா-இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு, சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் அவரு டன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.