[X] Close

ராகுலின் வியூகம் தோல்வி அடைந்ததன் பின்னணி இதுதானாம்..!

Why-Rahul-Gandhi-Strategy-fails

மக்களவைத் தே‌ர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் வியூகம் தோல்வி அடைந்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்பதை பார்க்கலாம்..


Advertisement

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ரஃபேல் விவகாரம் என பாரதிய ஜனதா சறுக்கிய விவகாரங்களை கையில் எடுத்து, இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தார் ராகுல். பாரதிய ஜனதா அறிவிப்பதற்கு முன்பாகவே தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பயணம் தொடங்‌கினார்‌ ராகுல்.

மாதம்தோறும் ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் செலுத்தும் திட்டம், ஜிஎஸ்டி எளிமையாக்கப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கினார். இளம் வாக்காளர்களை கவரும் வகையில், நேரடியாக கல்லூரிகளுக்கே சென்று மாணவர்கள் மத்தியிலும் நாட்டு நடப்புகளை எடுத்துரைத்து, எதிர் கேள்விகளுக்கும் பதிலுரைத்தார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற குற்றச்சாட்டுகளை, களையும் வகையில் இந்த முறை அமேதி மட்டுமின்றி, தென் இந்தியாவின் பிரதிநிதியாக ‌வயநாடு தொகுதியில் போட்டியிட்டார் ராகுல்.


Advertisement

பாரதிய ஜனதாவுக்கு எதிராக வகுத்த வியூகம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றமே பிரதமரை திருடன் என உறுதி செய்துவிட்டாக ரஃபேல் பேர விவகாரத்தை பேசி, சர்ச்சையில் சிக்கினார். இதற்காக உச்சநீதிமன்றத்திலும் அவர் இருமுறை மன்னிப்பு கேட்க நேர்ந்தது அவரது செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தவிர ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் 6 ரூபாய் பணம் செலுத்துவதாக அறிவித்த நியாயத் திட்டமும் பெரிதாக எடுபடவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மோடிக்கு எதிரான அலை வீசியபோதும், அதை சரியாக அறுவடை செய்வதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அவர் ஒழுங்குப்படுத்த தவறி விட்டதும் தோல்விக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.


Advertisement

2014 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அடைய முடியாத அளவுக்கு அடைந்த அதே படுதோல்வியை, இந்தத் தேர்தலிலும் சந்தித்திருப்பதால், தோல்விக்கு ராகுல் தான் காரணம் என்பதாக தற்போதும் விமர்சனங்கள் எழும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைபுரிந்து கொண்டவர் போல, இந்தத் தோல்விக்கு நூறு சதவிகிதம் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியே வரவேண்டும் என மக்‌கள் விரும்பி அளித்த முடிவை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவும் செய்தி‌யாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கும் செயற்குழுக் கூட்டத்தில் தான் அது பற்றி முடிவெடுக்கப்படும் என பதிலளித்து இப்போதைக்கு தோல்விக்கான விமர்சனங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ராகுல்.

கடந்த ஆண்டு நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெற்றிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அந்த வெற்றி எதிரொலிக்காதது ஏன் என்ற கேள்வியும் தொண்டர்களை வெகுவாகவே யோசிக்க வைத்திருக்கிறது. மறுபுறம், அமேதி தொகுதியில் வரலாறு காணாத அளவில் ராகுல் அடைந்த தோல்வியும் காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிரு‌க்கிறது.


Advertisement

Advertisement
[X] Close