Published : 21,May 2019 12:45 PM
பாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்?

பாஜகவின் விருந்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்குகிறார். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், விருந்து நடைபெறவுள்ள அதே ஹோட்டலில் தங்கியுள்ளார்.
மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நேற்று முன்தினம் முடிந்துள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கட்சிகளில் முக்கிய தலைவர்களுக்கு இன்று விருந்து அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதேபோல், பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இந்த விருந்தின் போது முக்கிய ஆலோசனைகளும் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க உள்ளார். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், விருந்து நடைபெறவுள்ள அதே ஹோட்டலில் தங்குகிறார்.
இதற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். இருவரும் தனித்தனியே பயணம் மேற்கொண்டிருப்பது தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் துணை முதல்வர் ஒபிஎஸ் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலும் முதலமைச்சர் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்குவதும் பேசு பொருளாகியுள்ளது.