Published : 19,May 2019 03:51 AM
டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு

டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விவசாயிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திட்டத்தை உடனடியாக கைவிடாவிடில், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்தனர்.
இதனிடையே, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, அனைத்து அரசியல் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து பொதுவான அமைப்பின்கீழ் போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தலவிருட்சமான தில்லை மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற அவர்கள், சுவாமியிடம் மனு கொடுத்து முறையிடும் நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.