[X] Close

சந்திரபாபு நாயுடு போடும் புதிய கணக்கு : சரிகட்டுவாரா சந்திரசேகர் ராவ் ?

Andhra-CM-Chandrababu-Naidu-new-plan---What-about-Chandrashekar-Rao--

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை 7ஆம் கட்ட கடைசித் தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இப்போது யார் ஆட்சியை பிடிப்பார்கள் ? என்ற ‘ஆட்சி ஜூரம்’ வந்துவிட்டது. ஆளும் பாஜகவா? எதிர்கட்சியான காங்கிரஸா ? அல்லது மூன்றாவது அணியா ? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. ஒருவேளை மூன்றாவது அணியின் ஆதரவு இருந்தால்தான் இரு கட்சிகளில் ஒன்று ஆட்சியமைக்க முடியுமென்றால், அந்த மூன்றாவது அணியில் யார் ? யார் ? இருப்பார்கள், அதன் ஒருங்கிணைப்பாளர் யார் ? என்ற கேள்விகளும், விவாதங்களும் இந்திய அளவில் வலுப்பெற்றுள்ளது.


Advertisement

ஆனால் இந்த வேலையை தெலுங்கு பேசும் ஒரு தலைவர்தான் செய்யப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையாகிவிட்டது. தெலுங்கு பேசும் தலைவர்களில் ஒருவரான தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏற்கனவே இந்தப் பணியின் இரண்டாம் கட்ட பயணத்தை முடித்துவிட்டார். அண்மையில் அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துவிட்டார். இவர் கடந்த ஆண்டே தனது முதற்கட்ட பயணத்தையும் முடித்துவிட்டார். 


Advertisement

சந்திரசேகர் ராவின் கணக்குப்படி, பிரதமர் பதவி இல்லையென்றாலும், துணைப் பிரதமர் பதவியையாவது வாங்கிவிட வேண்டும் என்ற திட்டம் அவரிடம் தெளிவாக உள்ளதாக தெரிகிறது. ஆனால் இவரது பட்டியலில் திமுக மட்டும் உறுதியாக காங்கிரஸ் கூட்டணிதான் ? என்ற நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் பெரும்பான்மை பெறாத பட்சத்தில் மூன்றாம் அணியை காங்கிரஸுடன் இணைக்கும் பணியை திமுக மேற்கொள்ளும் எனப்படுகிறது. 

சந்திரசேகர் ராவ் ஒருபுறம் இப்படி பயணம் செய்துமுடிக்க, அவருக்கு இணையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவரும் ஏற்கனவே ஒருகட்ட பயணத்தை முடித்துவிட்டார். ஆனால் சந்திரசேகர் ராவின் திட்டத்தைவிட சந்திரபாபு நாயுடுவின் திட்டம் பெரிதாக உள்ளது. இவர் மாயவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பேனர்ஜி, ஸ்டாலின், பினராயி விஜயன், கெஜ்ரிவால் என ஒரு பெரிய வட்டத்தை போட்டுக்கொண்டிருக்கிறார். 


Advertisement

சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணியிலிருந்து பிரிந்தவராக இருந்தாலும், இவர் பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் இருக்கிறார் என்ற சாயம் அவர் மீது பூசப்படவில்லை. ஆனால் அந்தச் சாயம் சந்திரசேகர் ராவின் மீது இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே சந்திரசேகர் ராவ் அமைக்கும் மூன்றாவது அணி மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கத்தான் எனவும் ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. எனவே இவரது பின்னால் எத்தனை பேர் திரளப்போகின்றனர் என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் 23ஆம் தேதிக்குப் பின் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் வந்தால், சந்திரபாபு நாயுடுவின் பேச்சு எடுபடுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தேசிய அளவில் ஒரு அணியை திரட்டி அதற்கு ஒருங்கிணைப்பாளராகி விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதற்காக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை சந்தித்தார். இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவரை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து லக்னோவிற்கு சென்று அங்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்திருக்கிறார். மேலும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்தித்துள்ளார். இதற்கிடையே அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பயணங்கள் தனித்தனியாக இருந்தாலும், சந்திரசேகர் ராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் அமைக்கும் அணியில் இருப்பவர்கள் எந்த நிலையில் பாஜக பக்கம் சாய்வார்களா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம். மத்திய அரசியலை பார்த்து முடிவெடுத்தால், பின்னர் மாநில அரசியலை எப்படி சந்திக்க முடியும் என்ற கேள்விகளை இந்தத் தலைவர்கள் சிந்திக்காமல் இருக்கமாட்டார்கள் என்பதே அரசியல் வல்லுநர்களின் பார்வையாக உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close