Published : 14,May 2019 01:29 PM
“மூன்று படகுகளில் சவாரி செய்யும் திறமை படைத்தவர் ஸ்டாலின்” - ஜெயக்குமார்

ஸ்டாலின், சிதம்பரம், தினகரனால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது ஆட்சியைக் கலைக்க கருணாநிதி முயற்சி செய்தார், அவரால் முடியவில்லை. அவரால் முடியாததை ஸ்டாலின் செய்துவிடுவாரா? ஸ்டாலின், சிதம்பரம், தினகரனால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. தினகரனின் பேச்சை மானம், சூடு, சுரணை உள்ள அதிமுக தொண்டர் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவையே டிடிவி தினகரன் குற்றம் சொல்லுகிறார். இதைவிட பெரிய துரோகம் எதுவும் கிடையாது. அவருடைய சுயரூபம் வெளிவந்துவிட்டது.
திமுக சொல்வது ஒன்று; செய்வது ஒன்றாகத்தான் இருக்கும். திமுகவை நினைத்தால் காங்கிரஸ் வெட்கி தலைகுணிய வேண்டும். திமுகவிற்கு அரசியல் கொள்கை கிடையாது. அவர்களின் ஒரே லட்சியம் பணம், பதவி. மூன்று படகுகளில் சவாரி செய்யும் திறமைபடைத்தவர் ஸ்டாலின். காங்கிரசிடம் பேசுவார்கள். அதேசமயம் சந்திரசேகர் ராவிடம் பேசுவார்கள். தற்போது பாஜகவிடமும் பேசிக்கொண்டு இருக்கிறார். அதைத்தான் பாஜக தலைவர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.