Published : 14,May 2019 06:58 AM

அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் - மநீம கோரிக்கை

MNM-demand-to-remove-post-from-Rajendra-Balaji

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “ முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்குப் பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும்  இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். அதனை மார்தட்டிச் சொல்வேன்” என்று குறிப்பிட்டார்.

கமலின் இந்தக்ச் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதனிடையே, சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கூறினார். “ யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும்” என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியம் துளியுமின்றி சட்டவிரோதமாக கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி தன் பதவி பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துக்கொண்டதற்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.