''நீங்க வர்ணனையாளரா? அல்லது மும்பை பயிற்சியாளரா?'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்!

''நீங்க வர்ணனையாளரா? அல்லது மும்பை பயிற்சியாளரா?'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்!
''நீங்க வர்ணனையாளரா? அல்லது மும்பை பயிற்சியாளரா?'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி. மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

நேற்றைய போட்டியின் போது விளையாட்டு வீரர்களை தாண்டி கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் பெற்றவர் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர். ஐபிஎல் இறுதி போட்டியை சஞ்சய் வர்ணனை செய்ய வந்தாரா? அல்லது மும்பை அணியை ஊக்கப்படுத்த வந்தாரா? என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே சஞ்சய் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வரத்தொடங்கிவிட்டன. 

''மும்பை அணியின் தீவிர ரசிகர் ஒருவர் வர்ணனையாளர் அறையில் கையில் மைக்குடன் அமர்ந்திருக்கிறார்'' என்று பதிவுகள் பறந்தன. அதற்கு ஏற்பவே சஞ்சயும் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக மும்பையின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வர்ணனையாளர் சஞ்சய் பல நுணுக்கங்களை கூறிக்கொண்டு இருந்தார். இது பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது. ''சஞ்சய் வர்ணனையாளரா? அல்லது மும்பை அணியின் பயிற்சியாளரா?'' என்று பலரும் ட்வீட் செய்தனர். 

மும்பை வீரர்களுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டே  மும்பை அணியை சஞ்சய் ஊக்கப்படுத்தலாமே? ஏன் வர்ணனையாளர் அறைக்குள் அமர்ந்திருக்கிறார் என்றும் பலரும் கிண்டல் பதிவுகளை பதிவிட்டனர். ஐபிஎல்லின் முக்கிய போட்டிகளில் ஆட்டத்தை வர்ணனை செய்யும் ஆட்களை வர்ணனையாளராக அமர்த்த வேண்டுமே தவிர குறிப்பிட்ட அணியின் ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது எனவும் கண்டன பதிவுகள் பதிவிடப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com