Published : 11,May 2019 02:15 AM

மோடியின் பேச்சு சிரிப்பூட்டுகிறது - மாயாவதி

mayavathi-reply-to-prime-minister-modi

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி சாதிய கூட்டணி என்று பிரதமர் மோடி பேசியிருப்பது சிரிப்பை வரவழைப்பதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் சாதிய வகையில் கூட்டணி சேர்ந்துள்ளன என மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் நரேந்திர மோடியின் இத்தகைய பேச்சுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாயாவதி, வாக்குப்பதிவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை அறிந்து கொண்ட விரக்தியில் இருப்பதால், மோடி இவ்வாறு அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக சாடியுள்ளார். தங்கள் கூட்டணியை சாதிய கூட்டணி என்று மோடி கூறியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், பக்குவமற்ற இந்தப் பேச்சை பிரதமர் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். 

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தலித் மக்கள் திருமண சடங்கிற்காகக் கூட குதிரையின் மீது செல்ல முடியாத நிலை உள்ளது என்றும் மாயாவதி சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் பிரதமராகும் மோடியின் கனவு பலிக்காது என்றும் மாயாவதி பதிவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்