Published : 08,May 2019 09:18 AM
45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் மனுவில், ஓக்கி புயல் தாக்கியபோது கன்னியாகுமரி மக்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததை மனதில் கொண்டு வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையிலும், அச்சம் காரணமாகவும்தான் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எனவே அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமெனவும், கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வாக்காளர் நீக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 2016ஆம்.ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பின், ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து வந்துள்ளதாகவும், அப்போதே பெயர் இடம் பெற்றிருக்கிறதா என சரிபார்த்திருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.