Published : 08,May 2019 06:56 AM
கோயில்களில் தொடரும் கொள்ளை - காவலர் நியமிக்க வழக்கு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உத்தமபாளையம் அருள்மிகு கருப்பசாமி திருக்கோயில், அனுமந்தன்பட்டி அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில், கம்பம் அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் மற்றும் ஓடைப்பட்டி காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மே 3ஆம் தேதி ராயப்பன்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூதநாராயணர் திருக்கோவிலில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 70 வயது முதியவர் மலையன் என்பவரை கொலை செய்ததோடு 60 வயது முதியவர் சுப்பிரமணியம் என்பவரை தாக்கி உள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணிக்கு முறையாக வருவதை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். அதோடு, திருட்டு சம்பவங்கள் குறித்து முறையாக விசாரிக்காத காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு, இது குறித்து உரிய பதிலளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.