Published : 08,May 2019 04:34 AM
பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் : பாஜகவுக்கு எதிராக வழக்குப்பதிவு

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த புகாரில் பாஜகவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அன்வி லவாசா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அரசியில் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் தேர்தல் தொடர்பான செய்திகளை தங்களுக்கு சாதகமாக எழுத பாஜக பணம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லே பகுதி பத்திரிகையாளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “ எங்கள் பகுதியில் பாஜக சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரானா மற்றும் விக்ரம் ரந்தாவா ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்க முயற்சி செய்தனர். இவ்வாறு பணம் கொடுத்து தேர்தல் முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக்க முயன்றனர்.
ஆனால் பத்திரிகையாளர்கள் யாரும் அந்தப் பணத்தை வாங்கவில்லை. இது எங்களை மிகவும் காயப்படுத்தியது. இதனால் பாஜக மாநில தலைவர் மற்றும் விக்ரம் ரந்தாவா ஆகியோர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யவேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இதற்கு விக்ரம் ரந்தாவா மறுப்பு தெரிவித்துள்ளார். நாங்கள் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த கவரில் எங்களின் அடுத்த பொதுகூட்டத்திற்கான அழைப்பிதழ் மட்டுமே இருந்தது. இதனை அவர்கள் பார்க்காமல் திருப்பி அளித்துவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் லே மாவட்ட தேர்தல் அதிகாரி அன்வி லவாசா கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஆனால் இதுவரை நீதிமன்றம் இதுகுறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக தலைவர்களால் நடத்தப்பட்ட சந்திப்பில் தேர்தல் விதிமுறைகள் மீறுவதாக கூறப்பட்டாலும், இது ஒரு குற்றவியல் குற்றம் என அன்வி லவாசா தெரிவித்தார்.
தேர்தல் அதிகாரி அன்வி லவாசா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மோடி மற்றும் அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய தேர்தல் பேச்சுகளுக்கு 5 முறை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவர் தேர்தல் விதிமீறல் புகார்களை விசாரிக்கும் தேர்தல் ஆணைய குழுவில் மூன்று பேரில் ஒருவராக உள்ளார். மற்ற இரண்டு பேரும் பாஜகவுக்கு சாதகமான முடிவை எடுப்பதால் இறுதி முடிவு பெரும்பான்மை அடிப்படையில் அமைகிறதாக கூறப்படுகிறது.