
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக, நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சூப்பர் ஓவரில் மும்பை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. கேப்டன் ரோகித் சர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் இரண்டு ஓவர்களில் 5 பவுண்டரிகள் விளாசினார். 24 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 17 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர், லெவிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால், 10 பந்துகளில் 18 ரன் எடுத்து அவரும் ஆட்டமிழந்தார். விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும், டி காக் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். பொல்லாடும் 10 ரன்னில் ஏமாற்றினார். மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
டி காக் 58 பந்துகளில் 69 ரன்களுடனும், குணால் பாண்ட்யா 3 பந்தில் ஒரு சிக்சர் உட்பட 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட் சாய்த்தார்.
வழக்கமாக டெத் ஓவர்களில் மும்பை வீரர்கள் சிறப்பாக ரன் சேர்ப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் என யாரேனும் ஒருவர் சிக்சர்களாக விளாசுவர். ஆனால், இந்தப் போட்டியில் டெத் ஓவர்களில் பெரிதாக ரன் அடிக்கப்படவில்லை. அதுவும் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா 25 ரன், குப்தில் 15 ரன், கேப்டன் வில்லியம்சன் 3, விஜய் சங்கர் 12, அபிஷேக் சர்மா 2 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மணிஷ் பாண்டேவும் இறுதியில் வந்த முகமது நபியும் நிலைத்து நின்று விளாசினார்கள்.
கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றி பெற 17 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அவர், முதல் 2 பந்தில் 2 ரன் விட்டுக்கொடுத்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்குத் தூக்கிய முகமது நபி, அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 ரன் எடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவை என்ற நிலையில் சிக்சர் விளாசினார் மணிஷ் பாண்டே. இதனால் ஸ்கோர் சமன் ஆனது. ஐதராபாத்தும் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஸ்கோர் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் ஐதராபாத் பேட்டிங் செய்தது. மணிஷ் பாண்டேவும் முகமது நபியும் களிமிறங்கினர். மும்பை தரப்பில் பும்ரா பந்துவீசினார். முதல் பந்திலேயே பாண்டே ரன் அவுட் ஆனார். அடுத்து குப்தில் வந்தார். மூன்றாவது பந்தில் நபி, சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் அவரையும் அவுட் ஆக்கினார் பும்ரா. இதனால் அந்த அணி வெறும் 8 ரன்னை மட்டுமே எடுத்தது.
அடுத்து மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யாவும் பொல்லார்டும் இறங்கினர். ரஷித் கான் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்குத் தூக்கிய ஹர்திக், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அதற்கடுத்தப் பந்தில் பொல்லார்ட் இரண்டு ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினார்.
இதன் மூலம் அடுத்த சுற்றுக்குச் சென்றது மும்பை அணி. ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய, பெங்களூரு அணியுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.